Wednesday, 26 February 2014

சிவராத்திரி. ஈசனை வணங்கி இறையருள் பெற்ற நாள்.

சிவராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதே போல் சிவராத்திரியைப் போற்றும் பல திருத்தலங்களும் உள்ளன.
பொதுவாக எல்லா சிவாலயங் களிலும் மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பிக்கப் படுகிறது.
கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன.
மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.
சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். இரவெல்லாம் சிவபெருமானைப் பூஜித்தாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். அந்த நாள் சிவராத்திரி.
தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமானை தியானித் தான். அப்போது ஆதி சேஷன்முன் தோன்றிய ஈசன், சோழ நாட் டில் காவிரிக்கரை யில் உள்ள தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திரியில் வழிபடுமாறு கூறினார். அதன் படி கும்ப கோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலத்தில் வழிபட்டபின், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரில் உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றான் என்று புராணம் கூறும்.
இதுபோல சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் பல உள்ளன. அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது “கோவிந்தா கோவிந்தா’ என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்.
சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிவ பெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. இயலாத வர்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அர்ச்சனை செய்து, ஐந்து வகையான அன்னங் களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும்.
அன்று தானதர்மங்கள் செய்வது சிறப்பிக்கப் படுகிறது.
சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!

Tuesday, 28 January 2014

செங்கோட்டை

கதை சொல்லும் சிற்பம் Published: Tuesday, October 21, 2008, 12:06 [IST] திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் கேரள எல்லையில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை ஆகும். கேரளத்திலிருந்து 52 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை நல்லூர் ராஜா என்பவர் ஆண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரின் மேற்கு பகுதியிலுள்ள நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை போன்றவற்றை காலம் சிதைத்த அடையாளங்களாக இன்றும் காணலாம். அக்கோட்டைதான் செங்கோட்டை என அழைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் செங்கோட்டை பல மகான்கள் அவதரித்த பூமியாகும். இங்கு நகரை சுற்றி ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் நிறைந்திருப்பதை காணலாம். இங்கு சிவனடியார்கள் அதிகமாக இருந்ததால் சிவன் கோட்டை என்ற பெயரும் இருந்தது. காலப்போக்கில் சிவன்கோட்டை மருவி செங்கோட்டை என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. பல ஆண்டு காலமாக கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம் அன்று திருவாங்கூர் மன்னர்களின் தனிக்கவனத்தை ஈர்த்தது. இந்நகரை சுற்றி 28 குளங்கள் உள்ளன. முன்பு கேரளாவோடு இருந்தபோது யாராவது திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்க சென்றால் தச்சன்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டு விட்டதா என்றுதான் முதலில் கேட்பர். தச்சன்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது மகாராஜாவுக்கு தெரியுமாம். மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள மிக சிறிய நகரம் செங்கோட்டை. 1956ம் ஆண்டு வரை கேரள எல்லைக்குட்பட்டிருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1-11-1956ல் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இவ்வூர் தாலுகா அந்தஸ்து பெற்ற ஊராகும். இவ்வூரின் நுழைவு பகுதியில் ஒரு வளைவு அமைக்கபபட்டுள்ளது. அந்த வளைவின் இருபுறங்களிலும் இருகற்சிலைகள் 5 அடி உயரத்தில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் சங்குவடிவம் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. துவாரபாலகர் சிலை: வடபுறம் துவர பாலகர் சிலை வலது கரத்தின் ஒரு விரலை காட்டியபடி இடதுகரத்தின் மடக்கி மூடிவைத்தபடியும் உள்ளது. இச்சிலை குறித்து செங்கோட்டையில் சிற்பகலை கூடம் நடத்தி வரும் சிற்பி மணி ஆசாரி கூறுகையில், துவாரபாலகர் சிலைகள் பெரிய ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு செல்லும் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும். அந்த சிலை போல் செங்கோட்டை நகர நுழைவு பகுதியில் வைக்கப்பட்டதின் நோக்கம் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆன்மீக பூமியாக விளங்கியது. அதன் நுழைவு பகுதியாக செங்கோட்டை இருந்ததால் ஊரின் நுழைவு பகுதியில் துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இரு சிலைகளுக்கு இரண்டு கதைகள் உண்டு. ஊருக்குள் நுழையும்போது வலப்பக்கம் அமைந்துள்ள சிலை ஒருவிரலை காட்டியபடியும், மற்றொரு கரம் மடித்து வைத்தும் இருக்கிறது. இவ்வூருக்குள் நுழையும் நீங்கள் ஒரே நிலைப்பாட்டோடும், வேறு சிந்தனையின்றி மனதை அலைபாயவிடாமல் எண்ணங்களை அடக்கி அமைதியாக உள்ளே வாருங்கள், உங்களது பிரச்சனையை நான் தீர்க்கிறேன் என்றும், இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ள சிலை இறைவனை நம்பி இவ்வூர் வந்தவர்கள் மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்று எனக்கு தெரிய எந்த ஊரிலும் ஊரின் நுழைவு பகுதியில் இதுபோன்ற சிலைகள் அமைக்கப்படவில்லை. மாற்றாக வேறு சாமி சிலைகள் தான் காவல் தெய்வங்களாக வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார். செங்கோட்டை என்றழைக்கப்படும் அன்றைய சிவன்கோட்டையில் நுழைவிலேயே பழமைவாய்ந்த ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2008/1021-senkottai-marvel-of-trivancore.html

Monday, 27 January 2014

நிகண்டு - முனைவர். தொ.பரமசிவன்

நிகண்டு - முனைவர். தொ.பரமசிவன்

''எதற்கெடுத்தாலும் தொல்காப்பியமா? என்று என்ன தான் ''நவீனர்கள்'' முகம் சுழித்தாலும் தொல்காப்பியத்திலிருந்து தான் தொடங்க வேண்டியிருக்கிறது. நிகண்டு என்ற சொல்லும் அதற்குரிய பொருளும் இன்றைய தமிழ் ஆய்வாளர்கள் பெரும்பாலோருக்குத் தெரியாது. தமிழர்களின் மரபுவழி அறிவுத்தொகுதி எங்கே கிடக்கிறது - என்கிற ஞானமும் கவலையும் இவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் சமூக அக்கறையுள்ள ஆய்வாளர்களுக்கு இது ஒரு அடிப்படைத் தேவையாகும்.

நிகண்டு என்ற சொல் தமிழ்ச்சொல்லாக தோன்றவில்லை. அது தமிழ்ச் சொல் தான் என்று நிறுவுவதற்கு சுந்தர சண்முகனார் போன்றோர் பெரு முயற்சி செய்துள்ளனர். நம்முடைய பார்வையில் அந்த முயற்சி தேவை இல்லாதது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ''உரியியல்'' என்ற ஒரு பகுதியுள்ளது. இந்த இயலில் 133 சொற்களுக்குத் தொல்காப்பியர் சுருக்கமாகப் பொருள் கூறுகிறார். இதுவே தமிழ் அகராதியின் மூலம் என்று அண்மையில் கிரகோரி ஜேம்ஸ் (Gregory James) என்ற அமெரிக்கர் ''தமிழ் அகராதிகளின் வரலாறு'' (History of Tamil Dictionaries) என்ற தம் நூலில் எழுதுகின்றார்.

உரிச்சொல் கிளவி அல்லது உரிச்சொல் பனுவல் என்பது பிங்கல, கயாதர நிகண்டுகளிலும் காணப்படும் பழைய பெயராகும். நன்னூல் உரையில் ''உரிச்சொல் பனுவல்'' என்ற தொடரே காணப்படுகிறது. ''காங்கேயன் உரிச்சொல்'' என்பதே 16 ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒரு நூலின் பெயராகும். எனவே இரண்டு நூல்களின் பழைய பெயர் உரிச்சொல் (அ) உரிச்சொல் பனுவல் என்று தெரிகிறது.

தொலைக்காட்சியிலே வியக்கத்தகுந்த காட்சி ஒன்றைப் பார்த்த குழந்தை, கண்களை அகல விரித்து ''ஐ'' என ஒலி எழுப்புகிறது. இந்த ஒலியின் பொருளை எழுத்திலக்கியங்களில் தேட முடியாது. ''ஐ... வியப்பு ஆகும்'' என்று தொல்காப்பியர்தான் இதன் பொருளைத் தனது உரியியலில் விளக்குகின்றனார். வெள்ளரிக்காயின் மிகச் சிறிய பிஞ்சினை ''தவப்பிஞ்சு'' என்று நம்வீட்டுப் பெண்கள் கூறுவார்கள். ''தவ'' என்பது உரிச்சொல் ஆகும். அண்மைக் காலமாக பேச்சுத் தமிழில் புழங்கி வரும். ''சூப்பர், தூள்'' என்ற பண்பு அடைச்சொற்கள் எல்லாம் மரபிலக்கணப்படி உரிச்சொற்களாகவே கருதப்பட வேண்டும். தமிழ் இலக்கணமரபு அந்த அளவு நெகிழ்வுடையது. இப்போது ஒன்று புரிகிறது அதாவது மக்கள் மொழியின் உயிர்ப்பினையும் ஆற்றலையும் அறிய விரும்புபவர்கள் எல்லாம் தமது தேடலைத் தொல்காப்பியத்தின் உரியியலிலிருந்து தான் தொடங்க வேண்டும் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னர் வித்துவான் படிப்பில் நிகண்டுகள் சேர்க்கப்பட்டிருந்தன. பின்னர், அது கைவிடப்பட்ட போது அகராதியியல் அறிவே தமிழர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. பிற்காலத்தில் வையாபுரிப்பிள்ளை, மு. அருணாசலம், சுந்தர சண்முகனார், வ. ஜெயதேவன் ஆகியோர் நிகண்டுகளைப் பற்றி கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். தமிழில் இதுவரை 35 நிகண்டு நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றோடு 20 ஆம் நூற்றாண்டிலும் ''நவமணிக்காரிகை'' என்ற பெயரில் சோழவந்தானூர் அரசஞ்சண்முகனால் ஒரு நிகண்டு நூல் செய்துள்ளார் தமிழ் நிகண்டு நூல்கள் பொதுவாக 12 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 ஆவது தொகுதி தொகைப் பெயர்ப்பிரிவாகும். அதாவது தொகைச் சொற்களைப் பட்டியிலிடுகின்றது. எடுத்துக்காட்டாக காலம் மூன்று, பொறிகள் ஐந்து, அரசு உறுப்புகள் ஆறு, சிற்பத் தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்கள் பத்து, அலங்காரம் இருபத்தெட்டு என்ற வகையில் இது அமைகின்றது பதினொன்றாம் தொகுதி '' ஒரு சொல் பல் பொருள் பெயர் தொகுதியாகும். ஒரு சொல்லுக்குரிய எல்லாப் பொருளையும் கூறும் இதுவே அகராதிகளின் மூலவடிவமாகும். ஏனைய பதினோரு தொகுதி களம் கருத்துக்குச் சொல் தருவனவாகும். அதாவது ஆங்கிலத்தில் Thesaurus தெசாரஸ் எனப்படும் நூல் வகையைச் சேர்ந்தவை. இவை முறையே தெய்வப் பெயர் தொகுதி, மக்கள் பெயர்த் தொகுதி விலங்கினைப் பெயர்த் தொகுதி, பெயர்த் தொகுதி, பண்புப்பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த்தொகுதி என்றவாறு அமைகின்றன.

ஆங்கில மொழிகளில் Thesaurus என்னும் கருத்து விளக்கச் சொல் தொகுதி முதன் முதலாக 1852ல் Rogets என்பவரால் செய்யப்பட்டது. தமிழில் தொன்மையான நிகண்டு நூல்களான திவாகரமும் பிங்கல நிகண்டும் முறையே 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன. எனவே கருத்துக்குச் சொல் தேடும் முயற்சி தமிழர்களின் பழைய வழக்கம் என்று தெரிகிறது.

அறியப்பட்ட எழுதிதிலக்கியங்களை விட நிகண்டு நூல்கள் காட்டும் தமிழ் அறிவுலகம் மிகமிகப் பெரியதாகும் 10 வகையான பெயர்த்தொகுதிகளில் அவை மேலோர் வாழ்நிலைகளை விட எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து நிறையச் செய்திகளை எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் ஆய்வாளர்களுக்கு இன்றளவுமான பேச்சுத் தமிழ் மொழியினைப் புரிந்து கொள்ள அவை தவிர உதவி செய்யக்கூடிய இலக்கியக் கருவிகள் வேறு எவையுமில்லை. இந்நிகண்டு நூல்கள் சமய எல்லைகளைத் தாண்டியனவாகவும் அமைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தொகுதிகளிலிருந்தும் சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம். நிகண்டுகளைப் பற்றிய புரிதலுக்கு இவை உதவும் இந்த எடுத்துக்காட்டுகள் திவாகரத்திலிருந்து மட்டும் இங்கே காட்டப்படுகின்றன.

தெய்வப் பெயர்களில் சிவன், திருமாலாகிய கடவுள்களோடு, சமண சமயம் சார்ந்து அருகனுக்கு நாற்பத்து மூன்று பெயர்களையும், அடித்தள மக்களின் வழிபடு தெய்வமான காடுகளுக்கு ஏழு பெயர்களையும், காளிக்குப் பதினான்கு பெயர்களையும், பகவதிக்கு இருபத்திரண்டு பெயர்களையும், திவாகரத்தில் காணலாம். நெருப்புக்கு 21 பெயர்கள்; இரண்டாவதான மக்கட்பெயர்த் தொகுதியில் துறவிகள், அறிஞர்கள், அரசர்கள், பரிவாரங்கள் ஆகிய பெயர்களோடு மருத்துவர், குயவர், உப்பு, விற்போர், சித்திரக்காரர் ஆகியோர் தம் பெயர்களையும் ஊன் விளைஞர், தோல் வினைஞர், கள் வினைஞர், பாணர், கழைத்கூத்தர், தமிழ்க்கூத்தர், வெறியாடுவோன், தேவராளன், கூத்தர் ஆகியோரின் பெயர்களையும் திவாகரம் பட்டியலிடுகின்றது. இதனால் நமது எழுத்திலக்கியங்களில் பெருமளவு விலக்கப்பட்டோர் நிகண்டு நூல்களால் முன்னிலைப் பெயர்களாகின்றன. இவற்றோடு உடலுறுப்புகளின் பெயர்களும் பேசப்படுகின்றன. விலங்கினப் பெயர்த்தொகுதியில் விலங்குகளின் வகைகளுள் அவற்றின் இளமைப் பெயர் களம் தரப்படுகின்றன. ஆட்டின் பொதும் பெயர்களையும் கூறிவிட்டு துருவாடு, வெள்ளாடு, வரையாடு, என வகைமைப் பெயர்களையும் அடுக்கிக் சொல்லும் நிகண்டு நூல்களில் அடுத்ததாக குட்டி வகைப் பெயர்களையும் காணுகின்றோம். பறவைகளின் வகைகளைப் பேசிய பிறகு மயிலின் பெயரோடு மயில் பீலியன் பெயர், மயில் இறகு முடியின் பெயர், மயில் சிகைகளின் பெயர்களைக் கூறி மிக நுணுக்கமாக, நத்தை, நண்டு, கரையான், புழு ஆகிய பெயர்களும் பட்டியலிடப்படுகின்றன. நாலாவது மரப்பெயர்த்தொகுதியில் 79 மரங்களில் பெயர்கள் பேசப்படுகின்றன. பூமாலையின் வகைகளாக மட்டும் 27 குறிக்கப்படுகின்றன. ஐந்தாவதான இடப்பெயர்த்தொகுதியில் ஊரைக் குறிக்க 27 பெயர்கள். அவற்றில் ஒரு நூற்பா, ''கல்வியூரி, கலிலூரியாகும், என்கிறது. ஆறாவதான பல்பொருள் பெயர்த்தொகுதியில் உலாகங்கள். மணிகள், அலங்காரப் பொருட்கள் பட்டியலிடப்படுகின்றன. சோறு என்பதை உணர்ந்த 24 சொற்களும், கள்ளுக்கு 48 சொற்களும் காட்டப்பட்டுள்ளன. தமிழர்கள் மதுவை ஒழுக்கப் கோட்பாடு சார்த்திக் காணவில்லை என்பதற்கு இது சான்றாகும்.. தமிழில் ''சிற்றுண்டி'' என்ற சொல் முதன்முதலாக இத்தொகுதியில்தான் காணப்படுகின்றது. பீரிகம் (பூரி) தோசை ஆகியவை அப்ப வகை உணவுகளாகும் எனத் திவாகரம் கூறுவதும் சமகால இலக்கியங்களில் இச்சொற்கள் காணப்படவில்லை என்பதும் சிந்திக்க தகுந்ததாகும்.

ஏழாவதான செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி ஆயுதங்களின் வடிவப்பெயர்களை முதலில் பேசுகின்றது. கழுமரத்தின் பெயரைக் ''கழுமுள்'' என்று சொல்வதிலிருந்து இப்பொழுது வழிபடு பொருள்களாகத் தமிழ்நாட்டில் காணப்படும் கழுமரங்களின் வடிவத்தினை அறிய முடிகிறது. பின்னர் பெண்களின் அணிகலன்கைளப் பேசி விட்டு இசைக் கருவிகளின் உறுப்புகளின் பெயர்களையும் நுட்பமாக அறியத் தருகின்றது. வீட்டில் பயன்படுத்தப் பெறும் பொருட்களான பாய், விளக்கு, நாழி, குடை, உரல் என்பவற்றோடு விளக்குமாறு, தலைச்சும்மாடு ஆகிய பெயர்களையும் இப்பகுதி பட்டியலிடுகின்றது. பண்பு பற்றிய பெயர்த்தொகுதி எட்டாவதாக கணிதவியல் அறிஞர்களும் அழகியல் குறித்துப்பேசுவோருக்கும் ஒரு அரிய கருவூலமாகும். ஐம்பொறிகளின் நுகர்வு பற்றிய கலைச்சொற்கள் இப்பகுதிகளில் நிறையவே இடம் பெற்றிருக்கின்றன. ஒன்பதாவதான செயல் பற்றிய பெயர்த்தொகுதி மனிதவுடலின் எல்லா அசைவுகளுக்குமான சொற்களைப் பட்டியலிடுகின்றனது.

பத்தாவது அமைவது ஒலி பற்றிய பெயர்த் தொகுதி. இதில் இசைத் துறைச் சார்ந்த கலைச் சொற்கள் நூற்றுக்கணக்கில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுதி எழுத்தில்லாத ஓசைப் பெயர்களையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஒரு சொல் பல்பொருள் பெயர்த்தொகுதி என்பது பதினொன்றவாவது. இது தமிழ் மரபுக் கவிதையினைப் புரிந்து கொள்வதற்குத் துணை செய்வதாகும்.

இவ்வகையில் திவாகர நிகண்டு 9500 சொற்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. பிங்கல நிகண்டு 14700 சொற்களையும் சூடாமணி நிகண்டு 11,000 சொற்களையும் பதிவு செய்து வைத்துள்ளது. நிகண்டுகளின் பெருமையெல்லாம் அவை பெரும்பாலான தமிழ் எழுத்திலக்கியங்கள் போல மேலோர் மரபு மட்டும் சார்ந்தவையல்ல என்பதே, அவைதீக மரவுகளைத் தேடத் தொடங்கிய அயோத்திதாசர் பண்டிருக்கு நிகண்டு நூல்களின் அருமை புரிந்தது, அதனால் தான் அவர் தம் ஆய்வுநூல்களில் அடிக்கடி நிகண்டு நூல்களை மேற்கோள் காட்டுகிறார்.

நமது இலக்கிய மரபு

நமது இலக்கிய மரபு - பரிபாடலில் திருமால் - வளவதுரையன்

பரிபாடலின் இரண்டாம் பாடலைப் பாடியவர் கீரந்தையார் எனும் புலவர் . உலகத்தின்தோற்றமுறைகளையும்வராக அவதாரத்தையும் சிறப்பித்துக்கூறி கொடுமையான எண்ணங்கள்இல்லாத நல்லறிவை அருளவேண்டுமெனத் திருமாலிடம் இப்பாடலில் அவர் வேண்டுகிறார்.
பரம்பொருளாகிய இறைவனிடத்திலிருந்து வானமும் அதிலிருந்து படிப்படியாக காற்றுதீநீர்நிலம்முதலியவை தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றனமேலும் பல்வேறு ஊழிக்காலங்கள்கடந்தபின்னர் தான் நிலஊழி தோன்றுகிறது.


நிலஊழி தோன்றுவதற்கு முன் நீர் ஊழிக்காலத்தில் எங்கணும் பெருவெள்ளம் பெருக்கெடுத்துக்கிடந்ததுஅவ்வெள்ளத்தினுள்ளே நில ஊழி மறைந்துகிடந்ததுஅந்த நில ஊழி வெளியே வந்துஅதில் உயிாினங்கள் தோன்றத் திருமாலே காரணமாக விளங்குவதைப் பரிபாடலின்
'கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவனை '
எனும் அடிகள் காட்டுகின்றன.

திருமாலேஉயிர்கள் உண்டாதற் பொருட்டு நீ வராக அவதாரம் எடுத்து வெள்ளத்தடியிலே கிடந்தஇந்த நிலத்தினை எடுத்தாய்அச்செயலால் இது வராக கற்பமென்னும் பெயர் பெற்றதுஇவற்றைஅழித்தும் மீளத்தோற்றுவித்தும் வருகின்ற திருவிளையாட்டினை நீ தொடர்ந்து செய்து வருகிறாய்என்று பரிபாடல் கூறுகிறது.

இதையே கம்பர் 'அலகிலா விளையாட்டு ' என்பார்இந்த விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பதோடுதிருமாலே சித்துஅசித்து ஆகிய இரண்டாகவும் இவ்வுலகில் திகழ்கிறார் என்றுதிருமங்கையாழ்வார் கூறுகிறார்.

'திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன்... '
என்பன அவர் அருளிச் செய்த பாசுர அடிகளாகும்.

திருமாலே ஐம்பூதங்களாக விளங்குவதை நம்மாழ்வார்
'நீராய் நிலனாய் தீயாய்
காலாய் நெடுவானாய் ' என்று பாடுகிறார்.

நில ஊழியை வெளிக்கொணர்ந்த ஊழிமுதல்வனின் பெருமையை மேலும் பரிபாடல் பேசுகிறது.

யார் யார் இறைவனை எப்படி எல்லாம் மனத்தில் எண்ணுகிறார்களோ அவர்கள் கருத்திற்கேற்பஎம்பெருமான் காட்சியளிப்பார்.எல்லாவற்றையும் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட உருஎன்பது மாயத்தோற்றமே.
எனவேதான்

'வளையோடு புரையும் வாலியோற்கவன்
இளையன் என்போர்க்கு இளைய யாதலும் '
என்று பரிபாடல் கூறுகிறது.

மேலும்

'புதையருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியேற்கு
முதியை என் போர்க்கு முதுமை தோன்றலும் '
எனும் அடிகளிலிருந்து எம்பெருமான் பலராமன் என எண்ணுவார்க்குப் பலராமனாகவும் கண்ணன்என்பார்க்குக் கண்ணனாகவும் அவரவர் நினைப்பிற்கேற்ப அருள்செய்வார் என்பது விளங்குகிறது.
சங்கினோடு ஒப்பான வெண்மையான நிறத்தைக் கொண்ட பலராமன் என்பதை 'வளையோடுபுரையும் வாலியோன் ' எனும் அடிகாட்டும் போது பொியாழ்வாாின் பாசுரம் நினைவிற்குவருகிறதுதளர் நடைப்பருவத்தில் வெள்ளிப்பெருமலைக்குட்டனான பலராமன் விரைந்தோடஅவன் பின்னால் தொடர்ந்து கருமலைக் குட்டன் அடிவைத்துச் செல்வது போல் கண்ணன்வருவானோ என அவர் கேட்கிறார்.

'பலதோன் என்னும்
தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான்
தளர்நடை நடவானோ ? '
என்றும் அவர் அருளிச் செய்கிறார்.

வராக அவதாரத்தைச் சிறப்பிப்பது இப்பாடலுக்குள்ள தனிச்சிறப்பாகும்வானளவு ஓங்கி நின்றவராகத்தின் கூர்மையான வெள்ளிய கொம்புகளுக்கிடையே நிலமகள் ஒரு புள்ளி போலவிளங்குகிறான்வராகக்களிறாகிய திருமால் அக்காலத்தே அவளை மணந்து கொண்டார் என்றும்இப்பாடல் காட்டுகிறது.

'பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப்
படைத்துக் காத் துண்டுமிழ்ந்த பரமன் '
என்று பெரி திரு மொழி காட்டுவதையும், பெரியாழ்வார்
'பன்றியும் மையும் மீனமுமாகிய
பாற்கடல் வண்ணா '
என்று அருளுவதையும் நினைக்கத் தோன்றுகிறது.

அடுத்து எதிர்த்து வரும் அவுணர்களை எம்பெருமான் வெற்றி கொண்ட விதம் கூறப்படுகிறது.பகைவரின் கொடிகள் அறுந்து விழும்படியாகவும்அவர்களின் செவிகள் செவிடாகும்படியாகவும்,அவர்தம் மணிமுடிகள் வீழும்படியாகவும் திருமாலின் சங்கு முழங்கிற்று.

'.... தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே '
என்று நாச்சியார் திருமொழியில் காண்கிறோம் .த்ிருமாலின் சக்கரப்படையானது பகைவரின்உடலிலிருந்து தலைகளை அறுத்துத் தள்ள அத்தலைகள் சிதறி விழுந்தன.பனைமரங்களின்மேலுள்ள பல பதினாயிரம் குலைகள் வீழ்வது போல் அவை வீழ்ந்ததாகப் பரிபாடல்

'பனைமிசைப் பலபதினாயிரம் குலைதரை உதிர்வ போல் '

என்று உவமை கூறுகிறதுதிருமங்கையாழ்வார் திருக்கண்ணங்குடியில் எழுந்தருளியுள்ளதிருமாலைப்பாடும்போது

'பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்
பருமுடி உதிரவில் வளைத்தோன் '
என்று அருளிச் செய்வது இங்கு நினைவு கூரத்தக்கது.

திருமாலின் ஒளி நீலமணியைப் போன்றதுஎம்பெருமான் கண்கள் தாமரை மலர்கள் போன்றன.அவர் வாய்மை தவறாமல் வரும் நாளைப் போன்றதுஅவர்தம் பொறுமை நிலத்தையும் எம்பிரான்அருள் மேகத்தையும் ஒத்தனஇவ்வாறு ஒட்டிமை பல கூறினாலும் 'எவ்வயிளோயும் நீயே ' என்றுகூறுவதால் அவர் அவற்றைக் கடந்து எல்லா இடங்களிலும் பரந்து விளங்குகிறார் என்று பரிபாடல்காட்டுகிறது.
மேலும் அந்தணர் முறையாகச் செய்கின்ற வேள்விச் சுடாில் நீ எழுந்தருளி அவர்களுக்குக் காட்சிதருகிறாய் என்று கூறப்படுவதால் சங்ககாலத்தில் வேள்விகள் நடைபெற்றதை அறிய முடிகிறது.

எம்பெருமான் சாதாரண மாந்தருக்குச் சிலைவடிவத்திலும் அந்தணருக்கு வேள்வித் தீயிலும்யோகியர்க்கு அவர் உள்ளத்திலும் சித்தர்களுக்கு எங்கும் எதனிடத்திலும் தோன்றுவான் என்றுகூறுவார்கள்.

'எம்பெருமானேதேவர்கட்கு சாவா மருந்தாகிய அமுதத்தைத் தந்தருள வேண்டுமென நீநினைத்தாய்உடனே அமுதம் அவர்களின் வாயினைச் சென்று அடைந்ததுஅவர்களும்முதுமையற்ற வாழ்வையும் தோற்காத தொள் வலியும் பெற்றனர்அமரர் பொருட்டாக அத்தகையநன்மை செய்து அருளிய பெரியோய் ! எமக்கும் அருள் புரிவீராக.

நாங்கள் நின் திருவடிகளில் எம் தலைகளை வைத்து வணங்கினோம்நின் புகழைச் சொல்லிநின்னைப் போற்றினோம்ஏன் தெரியுமா

'கொடும்பாடு அறியற்க எம் அறிவெனவே
என்று வேண்டுவதற்காகத்தான். '

என்று பரிபாடல் அடிகள் காட்டுகின்றன.

கொடும்பாடு என்பதற்கு மாறுபாடு என்று பொருள கொள்ளலாம்அறிவு என்பதே தெளிந்துஇருப்பதுதான்அதில் மயக்கமோமாறுபாடோ தோன்றக்கூடாதுஅறிவு தெளிவாக இருந்தால்தான்செய்யும் செயல் சிறந்து வாழ்வு மேம்பாடு அடையும்.எல்லாவற்றையும் அறிந்த பரம்பொருள் என்மனத்தை எக்காலத்தும் மாறுபாடு தோன்றாமல் இருக்க அருள் செய்ய வேண்டும்அதற்காகஇறைவனை நம் உள்ளில் இருப்பவனாக உணர்ந்து அவன் கடரடியைத் தொடவேண்டும் என்பதேஇப்பாடலின் கருத்தாகும்.

==

மருதம் இதழில் வெளியானது

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள்

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 4 - ப.முருகன் 

பள்ளு

திருவிழாக்காலங்களில் கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு. கட்டபொம்மன் நாடகத்தில் ‘சக்களத்திச் சண்டை’ எனும்காட்சிகள் சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டிருக்கும். அந்த சக்களத்திச் சண்டை எதனுடைய பிரதிபலிப்பு - தாக்கம் என்றால் முக்கூடற்பள்ளு எனும் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் சக்களத்திகளின் சண்டை தான்.

முக்கூடற்பள்ளு புகழ்பெற்ற பள்ளு இலக்கியமாகும். இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களில் ஒன்று மருதநிலம். வயலும் வயல் சார்ந்த இடமும் கொண்ட இந்த நிலப் பகுதியில் செழித்து நடைபெறும் தொழில் உழவுத் தொழில். இந்தத் தொழிலில் ஈடுபடும் பள்ளர் இன மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு கூத்து வடிவில் பாடப்படுவது பள்ளு இலக்கியம். இதை உழத்திப் பாட்டு என்றும் அழைப்பார்கள். தமிழின் முதல் தலித் இலக்கியம் எனவும் கொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் அருணன்.

உழவர்களின் தொழில் பள்ளத்தில் அதாவது பள்ளமான நீர் வயலில் நடைபெறுகிறது. அதனால் அவர்கள் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று கூறுவர். உழவுத் தொழிலும் பள்ளத்தில் நடக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும் பள்ளத்தில் கிடக்கிறது. அதனால்தான் உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது போன்ற பழமொழிகள் தோன்றின. அந்த அனுபவ மொழிகள் இன்றும் மாறாமல்தான் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் தற்போதைய விவசாயிகளின் தற்கொலைச்சாவுகள்.

பள்ளு நூல்களின் மூலம் பள்ளரின் பெருமை, மழைக்குறி, பள்ளர் பள்ளியர் பேச்சு, நெல்வகை, மாட்டுவகை, பயிர்த்தொழில் நுட்பங்கள், உழவு, நடவு, அறுவடை முதலியவை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று முனைவர் சா.சவரிமுத்து குறிப்பிடுகிறார்.

நெல்லு வகையை எண்ணினாலும் எண்ணலாம் பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் பழமொழியால் பள்ளு நூல்கள் மிகுதியாக இருந்திருக்கின்றன என்பதை அறியலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பள்ளு இலக்கியங்களுள் அருணாசலக் கவிராயர் எழுதிய சீர்காழிப் பள்ளும், பெரியவன் கவிராயர் எழுதிய முருகன் பள்ளும் குறிப்பிடத்தக்கவை. திருவாரூர் பள்ளு, வாரானைப் பள்ளு, ஞானப்பள்ளு, வைசியப் பள்ளு, திருநீலகண்டன் பள்ளு, கதிரமலைப்பள்ளு, குருகூர்ப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு போன்ற நூல்கள் சிறப்பானவை. எல்லாவற்றையும் விட சிறப்புடையதும் புகழ் பெற்றதும் முக்கூடற்பள்ளு ஆகும். இதுதான் பள்ளு நூல்களுள் பழமையானது.

இந்நூலை எழுதியவர் என்னயினாப் புலவர் என்று கூறப்படுகிறது. என்றாலும் நூலை எழுதியவர் பெயரை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. 18ம்நூற்றாண்டு எனத் தெரிகிறது. அந்தக் காலத்தில் சைவ, வைணவ சமயப் பிரிவினரிடையே மோதல்கள் நிகழ்ந்தன. அதனால் அக்காலத்து நூல்களில் இத்தகைய சமயப்பூசல்கள் வெளிப்படுகின்றன. நூலாசிரியர்கள் அவரவர் சமயத்துக் கருத்துக்களை தத்தம் நூல்களில் புகுத்தியுள்ளனர்.

இதர சிற்றிலக்கியங்களில் அரசன், இறைவன் போன்றவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். இதில் மட்டும்தான் உழைப்பாளி அதாவது விவசாயி, அவன் மனைவியர், அவனது ஆண்டை பாடப்படுகின்றனர். அவர்கள் தெய்வத்தைப் பற்றிப் பேசுவார்கள்.

முக்கூடற்பள்ளு நூலிலே காப்புச் செய்யுள்கள், குடிமை பெருமை, வளமை, செழுமை, குமுறல் கொடுமை, விடுதலை விளக்கம், விளைவு மகிழ்வு, கலங்கல் தெளிவு என ஏழு பகுதிகள் உள்ளன. இவற்றில் கொச்சகக்கலிப்பாவும் சிந்துவும் பாவகைகளாக இடம்பெறுகின்றன. பெரும்பாலான சிந்து பாடல்கள் பல்வேறு இராகம், தாளத்துடன் உள்ளன.

காப்புச் செய்யுள் பகுதி முடிந்ததும் பள்ளியரின் வரவு, முக்கூடற்பள்ளி, மருதூர்ப்பள்ளி என அறிமுகம் களை கட்டுவதே நாடகப்பாங்கிலானது. நிறைவுப் பகுதி பள்ளியரின் சமாதானம். கூடிப்பாடுதலுடன் அமைகிறது. பிறந்த ஊர்ப் பெருமையும் வணங்கும் கடவுள் நிறைவையும் சொல்லி ஏசலும் பூசலும் ஏராளமாய் நடக்கிறது. பள்ளனின் வரவும் பண்ணையாரின் உருட்டல் மிரட்டலும் தொடர்கிறது. இவற்றுக்கிடையில் அமைந்த கவிச்சுவையை நாம் பருகலாம்.

கடின உரையைக் கேட்டு வடிவழகக் குடும்பன்

குடிலிலிருந்தே அரை நொடியில் வந்தான்

பள்ளனைப் பண்ணைக்காரன்

கள்ளமாய்ப் பார்த்துப் பள்ளா

துள்ளாதே பண்ணைச் சேதி விள்ளடா என்றான்

என்ற பண்ணையாரின் கேள்விக்குப் பள்ளன் கூறிய பதில்,

பத்து உருவத்தழகர் பண்ணையான் கேட்டபடி

வித்துவகை மாட்டுவகை மேழி ஏர்க்கால் முதலாய்க்

கொத்துவகை அத்தனையும் கூட்டி வரத்துஞ் செலவும்

வைத்த இருப்புங்குடும்பன் மாறாமல் கூறினானே

இந்தப் பள்ளுக்குள் நுழைந்தால் இலக்கியச் சுவையை மட்டுமின்றி சமுதாய நிலையையும் தெளிவுறத் தெரி யலாம்.

நன்றி - தீக்கதிர் மற்றும் முருகன்